தஞ்சாவூர்: டிச.21- தட்டிக்கொடுத்து படியுங்கள் என்று சொல்பவர்களை விட இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நேரத்தை விரையம் ஆக்குகிறார்கள் என்று தடை சொல்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். இவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கி இருங்கள் என்று தஞ்சையில் நடந்த சிவாஸ் ஐஏஎஸ் அகாடமி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை ஸ்பெஷல் பிரான்ச் சி ஐ டி எஸ் பி சரவணன் அறிவுரை வழங்கி பேசினார்.

தஞ்சை மேரிஸ்கார்னர், தீன் காம்ப்ளக்ஸ்சில் “சிவாஸ் ஐஏஎஸ் அகாடமி “தொடக்கவிழா நடந்தது. விழாவிற்கு நிறுவனர் லயன்ஸ் எஸ்.சிவா தலைமை வகித்தார். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து தஞ்சை பயிற்சி கலெக்டர் யஸ்வந்த் கண்ணன் மாணவர்களுக்கு விளக்கமளித்து பேசினார். 

இதில் தஞ்சை பாரத் கல்லூரி நிர்வாகி புனிதா கணேசன் பேசுகையில்,கடைக்கோடியில் உள்ள கடைசி மனிதரின் பிரச்சனைகளை புரிந்து கொள்பவர்கள் வெற்றி அடைகின்றனர் நீங்களும் சிறப்பாகப் பயின்று குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சென்னை ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. எஸ்.பி. சரவணன் பேசியதாவது:  சென்னை போன்ற பெரு நகரங்களை தவிர்த்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இருந்து இதுபோன்ற தேர்வுகளை எழுத நினைப்பவர்கள் இத்தேர்வு எழுதுவதற்கு முதல் மதிப்பெண் பெறுபவர்கள் ஆக இருக்கவேண்டும். நன்றாக படிப்பவர்கள் ஆக இருக்க வேண்டும். ஆங்கிலப் புலமை இருத்தல் வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவையெல்லாம் தேவை இல்லை. நான் என் வாழ்க்கையில் முதல் மதிப்பெண் எப்போதும் பெற்றது கிடையாது. ஆங்கிலப்புலமையும் கிடையாது. எனவே அதை பற்றிய கவலை வேண்டாம். 
தட்டிக்கொடுத்து படியுங்கள் என்று சொல்பவர்களை விட இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நேரத்தை விரையம் ஆக்குகிறார்கள் என்று தடை சொல்பவர்கள் தான் அதிகம் உள்ளனர்.

இவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கி இருங்கள். நீங்கள் யாரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களை நீங்களே திருப்திபடுத்தும் வகையில் படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை எழுதி பார்த்து படிக்க வேண்டும். பள்ளியில் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குரூப்1, குரூப் 2 போன்றவற்றிற்கு அறிவிப்பு வந்துள்ளது. சரியான நேரத்தில் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களால் முடியும் என்று நம்புகிறேன். சரியான புத்தகங்களை தேர்வு செய்து படியுங்கள். 
உழைப்புக்கு ஏற்ற வெற்றி என்பது நிச்சயம் வந்தே தீரும். இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவில் பல்த்துறை, தமிழ் சான்றோர் பெருமக்களும்,கல்வியாளர்களும், மாணவ,மாணவிகளும், பெற்றோர்களும், மற்றும் பொதுமக்ககளும் கலந்துகொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.