தஞ்சாவூர் அக்:1. தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இருதய நோய் தொடர்பான மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, தஞ்சாவூர் ஆர்.கே.மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான இருதய நோய் தொடர்பான மாபெறும் இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களின் நலனுக்காக “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வகையான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மூலம் நோயாளிகளை கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அளித்து வருகிறது. மேலும், 125 குழந்தைகளில் 1 குழந்தைக்கு பிறவி இருதயக் கோளாறுகள், இருதயத்தின் அமைப்பு மற்றும் நாளங்களில் கோளாறு ஏற்படுகிறது. பெற்றோர்களுக்கு இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பிறவி இதய கோளாறுக்கான உகந்த மருத்துவ சிகிச்சை வழங்குவது சவாலாக உள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகப்படியான வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்றவை இருதய பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும். இதற்கு இம்முகாமில் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருதயக் கோளாறுகள் கண்டறியப்பட்டால் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இம்முகாமில் சுகாதார துறை மூலமாக இருதய நோய் பூர்வாங்க பரிசோதனை செய்யப்பட்ட 150 மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்றனர். இவர்களுக்கு எக்கோ ஸ்கேனிங் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை தேவையா என்பதை உறுதி செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படும். எனவே இருதய நோயின் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இம் முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் பேசினார்.

இம்முகாமில் முதல்வர் (மருத்துவ கல்லூரி) மரு.ரவிக்குமார், ஆர்.கே.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மரு.சிங்காரவேலு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு தலைவர் மரு.செல்வகுமார், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.ரமேஷ் குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதய பிரிவு தலைவர் மரு.செந்தில்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மரு.செல்வம், அப்போலோ குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மரு.மணிராம் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat