தஞ்சை 18 தஞ்சையில் மேலும் 2 பள்ளியில் 4 ஆசிரியர்கள், 1 மாணவிக்கு கொரோனா
தொடர் பரவலால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம், ஏற்கனவே 3 பள்ளிகளில் 71 பேர் தொற்றால் பாதிப்பு.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 69 ஆக உயர்ந்தது.


இதேப்போல் பட்டுக் கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 பள்ளிகளில் கொரோனா பரவிய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளிலும் மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இன்னும் சிலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது. இதேப்போல் தஞ்சையில் மற்றொரு அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் 2 ஆசிரியை மற்றும் 1 மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.


கடந்த 1 வாரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 58 மாணவிகள், 6 ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர் மற்றும் மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பள்ளிகளில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை

Open chat