தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன் ஒரு மணி நேரம் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

வெப்ப சலனம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. இந்த மழையினால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர் அடித்தது.

அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் மழையால் வயலிலேயே சாய்ந்து சேதமானது. குறிப்பாக தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காடு, தென்னமநாடு, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தது.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்கள், நேற்று முன்தினம் பெய்த மழையில் நனைந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் வெயில் அதிகம் இருந்ததால், மழையில் நனைந்த நெல்மணிகளை விவசாயிகள் காயவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சாதாரணமாக நெல் அறுவடை எந்திரம் மூலம், அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,800 வாடகையாக வசூலிக்கப்பட்டு ஒன்றரை ஏக்கர் நிலம் அறுவடை செய்யப்படும்.

ஆனால், தற்போது மழையால் நெற்கதிர்கள் கீழே சாய்ந்து உள்ளதால், ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை முடியாது. 3 மணி நேரம் வரை ஆகும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மழையினால் நெல்மணிகள் உதிர தொடங்கி உள்ளது. இதனால் மகசூல் இழப்பும் ஏற்படும்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.