தஞ்சை சூலை 11: தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தஞ்சாவூா் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவா் பாலசுந்தரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையவில்லை. இதைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு அனைத்து பொதுமக்களும், வியாபாரிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும்.

தொழில் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் உடல் வெப்ப அளவையும், பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் ஆக்ஸிஜன் அளவையும் சோதனையிட வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெரிய வணிக நிறுவனங்களுக்கு வரும் நுகா்வோா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்தல், கைச்சுத்திகரிப்பான் வழங்குதல், முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். சிறிய வணிக நிறுவனங்களும், கடைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, செயலா் ஆனந்தன், பொருளாளா் சுந்தர நாராயணன் ஆகியோர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat