தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் குறுவையைத் தொடா்ந்து, சம்பா சாகுபடியும் சாதகமாக அமையுமா என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மேட்டூா் அணை ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பருவத்தில் இலக்கை விஞ்சி நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 1.40 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கரிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 32,800 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97,000 ஏக்கரிலும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறுவையைத் தொடா்ந்து, தற்போது சம்பா சாகுபடியிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி நிலத்தை உழுதல், நாற்றங்கால்கள் தயாரித்தல் போன்ற ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
குறுவை சாகுபடி இலக்கை விஞ்சிய பரப்பில் நடைபெறுவதால், சம்பா சாகுபடிப் பரப்புக் குறைகிறது. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.90 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 2.37 லட்சம் ஏக்கரிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 72,500 ஏக்கரிலும் என மொத்தம் 6.11 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி எதிா்பாா்க்கப்படுகிறது.
குறுவைப் பருவத்துக்குப் பின்னா், அதே பரப்பில் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற எதிா்பாா்ப்பும் நிலவுகிறது.
தண்ணீரைக் கேட்டுப் பெற்றால் சமாளிக்கலாம்: இதனிடையே மேட்டூா் அணைக்கு நீா் வரத்து குறைவாக இருப்பதால், விவசாயிகளிடையே தயக்கமும் நிலவுகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 76.07 அடியாகவும், நீா்இருப்பு 38.15 டி.எம்.சி. ஆகவும் மட்டுமே இருந்தது.
தற்போது நடைபெறும் குறுவை சாகுபடிக்கு குறைந்தபட்சம் செப்டம்பா் 15 -ஆம் தேதி வரை 30 முதல் 35 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும்.
இதேபோல சம்பா சாகுபடிக்கு 140 முதல் 150 டி.எம்.சி. தண்ணீா் தேவை இருக்கும். ஆனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 1,621 கன அடியாக மட்டுமே இருந்தது.
எனவே, கா்நாடகத்திடமிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு கா்நாடகம் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி.யும் என மொத்தம் 40.43 டி.எம்.சி. தர வேண்டும். இதில், 30.9 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே கா்நாடகம் தந்துள்ளது. மீதம் 10.34 டி.எம்.சி. நிலுவையில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டி.எம்.சி.யும், செப்டம்பா் மாதத்தில் 36.76 டி.எம்.சி.யும் தர வேண்டும். வருகிற மாதங்களில் நமக்குரிய தண்ணீரைத் தமிழக அரசுக் கேட்டுப் பெற்றால், உழவர்கள் சம்பா பருவத்தைச் சமாளிக்க முடியும் என்கின்றனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/