தஞ்சை சூன் 03 :தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடந்தது.

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி செழியன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்த ராவ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியை தொடங்கிடும் வகையில் நீர் இருப்பைப் பொறுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் நீர் கடைமடை வரை வீணாகாமல் சென்று சேர்ந்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20.5 கோடி மதிப்பீட்டில் 1169 .14 கிலோ மீட்டர் தூரத்திற்கு 185 தூர்வாரும் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை கண்காணித்திட கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் ஃ மெட்ரோ ரயில்கள் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து தேவையான இயந்திரங்கள் விரைவாக மற்ற இடங்களிலிருந்து பெற்று பணிகளை விரைவுபடுத்திட மாவட்ட அறிவுறுத்தினார். மேலும் ஒரே வாகனத்தினை வைத்து இரண்டு, மூன்று பணிகளை மேற்கொள்ளாமல் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே வாகனங்களை பயன்படுத்தி பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்.

தூர்வாரும் பணி மேற்கொள்ளும் பொழுது கரைகளை முழுமையாக சீர்செய்திடவும், கரைகளில் போடப்படும் மண் மீண்டும் ஆற்றுக்குள் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகள் நடைபெறும் இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூறும்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் உள்ள மண் திட்டுகளை அகற்றிடவும், ஆகாயத்தாமரை மற்றும் செடி,கொடிகளை முழுமையாக அகற்றிட தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் எம்.பி.கள் தஞ்சை பழநிமாணிக்கம், மயிலாடுதுறை ராமலிங்கம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், கும்பகோணம் அன்பழகன், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.