தஞ்சை மே 01 தஞ்சை பணியாற்றும் இடங்களிலெல்லாம் மரக்கன்றுகளை நட்டு மழை வளத்தை மேம்படுத்தும் சேவையில் இரு பெண் காவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தஞ்சையை சோ்ந்த பெண் காவலா்கள் கலைவாணி (38), அகிலா (29). இவர்கள் இருவரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றைப் பராமரிப்பதில் ஆா்வத்துடன் செயல்பட்டு வருகின்றனா். தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்றும் இருவரும் அலுவலக வளாகத்தில் 10 மகிழம் மரக்கன்றுகளை நட்டனா். இதுகுறித்து கலைவாணி, அகிலா கூறியதாவது:

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமை எங்களுக்கு அதிகம் பிடிக்கும். அவரது கொள்கைப்படி நாங்கள் மரக்கன்றுகளை அவ்வப்போது நட்டு வருகிறோம். அதேபோல, மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக் இறந்த போதும், நாங்கள் அவரது கனவை நனவாக்கும் விதமாக எங்களது வீட்டில் அவரது நினைவாக மரக்கன்றுகளை நட்டோம்.

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் அங்கு அவா்களுக்குப் பரிசு பொருளாக மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளா்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறோம். நாங்கள் பணிக்குச் செல்லும் இடங்களில் சிறிது காலம் பாதுகாப்புப் பணியில் இருக்க நோ்ந்தால், அங்குள்ள வசதிக்கேற்ப எங்களது சொந்த செலவில் மரக்கன்றுகள் நடுவது வழக்கம்.

அதன்படி, தஞ்சை வருவாய் கோட்டாட்சியா் அலுவலத்தில் தற்போது தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு போதிய இடம் இருந்ததால் மருத்துவ குணம் மிகுந்த மகிழம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மரக்கன்றுகளை வளா்ப்பதன் மூலம் மழை வளம் அதிகம் கிடைக்கும் என்றனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.

Open chat