தஞ்சை ஏப்ரல் 15 தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு இன்று முதல் (15ம் தேதி) மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரேனா ஊரடங்களால் கடந்த ஆண்டு (2020) 135 நாட்களுக்கு மேலாக தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன் கிடைக்காமல் வருவாய் இழந்தனர். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது டீசல் விலையும் உயர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்தாண்டு மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த கூடாது. அல்லது தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிராகரித்துள்ளன.

வழக்கம்போல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் தொடங்குகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45 நாட்கள் மட்டுமே மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அதன் கால அளவு 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Open chat