தஞ்சை, அக்,16- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் சிறப்பு தூய்மைபணி முகாம் நடைபெற உள்ளது என்று வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் சுகாதார சிறப்பு தூய்மைபணி முகாமை வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேரூராட்சிகளில் சுகாதார சிறப்பு தூய்மைபணி முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளார். இதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் சுகாதார சிறப்பு தூய்மைபணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டுகளில் 653.832 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளும், 103.579 கிலோமீட்டர் நீளத்திற்குமழைநீர் வடிகால்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளில் 264 எண்ணிக்கையில் நிரந்தரப் பணியாளர்களும் மற்றும் 651 எண்ணிக்கையில் ஒப்பந்த பணியாளர்களும் என மொத்தம் 915 பணியாளர்களை கொண்டு 22 எண்ணிக்கையிலான மினிலாரி, 19 டாடா ஏஸ், 44 பேட்டரி வாகனம், 26 டிராக்டர் மற்றும் 6 இதரவாகனம் என மொத்தம் 117 எண்ணிக்கையிலான வாகனங்கள் மூலம் தினமும் தூய்மைபணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 16.81 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் 15 எண்ணிக்கையிலான வார்டுக்களில் 3489 குடியிருப்புகளும், 11915 மக்கள்தொகையும் கொண்டது. ஆடுதுறை பேரூராட்சி மூலம் 23.016 கிலோமீட்டர் சாலைகளும் 3.339 கிலோ மீட்டர் வடிகால்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆடுதுறை பேரூராட்சியில் வரும் 30ம் தேதி வரை 15 வார்டுகளிலும் சிறப்பு தூய்மைபணி முகாம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு தூய்மை பணி முகாம் மூலம் தஞ்சை மாவட்டத்தை குப்பை கழிவுகள் இல்லாத மாவட்டமாக மாற்றிட பேரூராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்
பேசினார்.

தொடர்ந்து கே.ஜி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலை வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், ஆடுதுறை பேரூராட்சி செயல்அலுவலர் ஆளவந்தார், வட்டாட்சியர் சந்தனவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat