கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் 16 ஊராட்சியில் 32 தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம் மட்டுமல்லாது கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலக சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
ஒரு பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டால், அந்த பகுதியை சீல் வைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கும்பகோணத்தை சுற்றி உள்ள 16 ஊராட்சிகளில் உள்ள 32 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வெளியாட்கள் செல்ல முடியாதபடி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமங்களில் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது.

கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களில் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களை தேவைப்பட்டால் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை, கோவிலாச்சேரியில் உள்ள சிகிச்சை மையம், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக அண்ணலக்ரஹாரம், பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பாபுராஜபுரம், தில்லையம்பூர், மகாராஜபுரம், கொத்தங்குடி உள்ளிட்ட 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கும்பகோணம் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.