தஞ்சாவூர் சூலை 30: திமுகவில் சேர அதிமுகவை சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் பரசுராமன் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அதிமுக, அமமுக பிரமுகா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் திமுகவில் இணைந்து வருகின்றனா்.

அந்த வகையில் தஞ்சாவூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்துக்கு, தஞ்சாவூா் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலராக உள்ளவருமான பரசுராமன் தனது ஆதரவாளா்களுடன் சென்றாா்.

அங்கு திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், திருவையாறு தொகுதி எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், ஒரத்தநாடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திமுகவில் இணைய பரசுராமன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்
https://www.thanjai.today/

Open chat