தஞ்சாவூர் மார்ச் 06: கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேயரானது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
கும்பகோணம் மாநகராட்சியின் மேயராக ஆட்டோ ஓட்டுநர் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி நிரூபணமாகிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் போட்டிகள் நிறைந்த ஜனநாயகத்தில் மேயராக தேர்வாகி இருப்பது மாபெரும் சாதனையாக கருத வேண்டியுள்ளது.

இந்த சாதனை இந்தியாவில் சமத்துவத்துக்காகப் போராடிய அனைத்து தலைவர்களுக்கும் சமர்ப்பணம். மகாத்மா காந்தி தொடங்கி தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பெருமைப்படக்கூடிய தேர்வாக கும்பகோணம் மாநகராட்சி மேயர் தேர்வு நடந்துள்ளது. மிகவும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள் செல்வாக்குமிக்கவர்கள் மட்டுமே மேயர் போன்ற உயர்ந்த பொறுப்புகளை வகிக்க முடியும் என்கிற எண்ணத்தை இந்த மேயர் தேர்வு மாற்றியிருக்கிறது. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாநகராட்சியின் உயரிய பொறுப்பான மேயர் பதவிக்கு வந்திருப்பது இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேசிய தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு ஆட்டோ ஓட்டுநர் மேயராக தேர்வு செய்யப்பட்டிருப்பது கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனை. இதற்கு அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட திமுக முழுவதும் ஒத்துழைப்பு அளித்திருப்பது மிகப் பெரிய விஷயம். கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான தோழமை கும்பகோணம் பகுதியில் சிறப்பாக அமைந்துள்ளது என்றார் அழகிரி. அப்போது, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மேயர் க. சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.