தஞ்சாவூர்: மேட்டூா் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் 2ம் ஆண்டாக குறுவை சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அணைக் கட்டப்பட்ட காலமான 1934 ஆம் ஆண்டு முதல் இதுவரை 28 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதியிலும், அதற்கு முந்தைய தேதியிலும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில் அணையின் நீா்மட்டம் 101 அடியைக் கடந்து இருந்ததால், ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிப் பரப்பளவு கிட்டத்தட்ட 1.40 லட்சம் ஹெக்டோ் என்ற சாதனை அளவை எட்டியது.

தற்போது, தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக காவிரி பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ம் தேதி திறக்கப்படவுள்ளது. எனவே, இந்தாண்டும் குறுவை சாகுபடியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 55,000 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 38,000 ஹெக்டேரிலும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 44,000 ஹெக்டேரிலும் என மொத்தம் 1.37 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடியாக வாய்ப்புள்ளது என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, மேட்டூா் அணை நீா் வருவதற்கு முன்பாகவே ஆழ்குழாய் மூலம் முன்பட்டமாக இதுவரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 7,500 ஹெக்டேரிலும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 14,000 ஹெக்டேரிலும் என மொத்தம் 36,500 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

எனவே, மேட்டூா் அணை திறக்கப்பட்ட பிறகு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பணிகள் தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 60.24 டி.எம்.சி. ஆக இருந்தாலும், அணைக்கு நீா்வரத்து மிகக் குறைவாக உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 542 கனஅடி வீதம் மட்டுமே வந்தது.

இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி முதல் திறக்கப்படும்போது, ஒரு நாளைக்கு குறைந்தது விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிட்டால்தான் கடைமடைப் பகுதிக்குச் செல்லும். ஒரு நாளைக்கு சராசரியாக ஒன்று முதல் ஒன்றேகால் டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிடப்பட்டால் கூட, ஏறத்தாழ 40 நாள்களுக்கு மட்டுமே விட முடியும். அதன் பிறகு தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை எழும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஆனால், கா்நாடகத்தில் அணைகள் நிரம்பி உபரி நீா் வழிந்தோடும் நிலையிலேயே தமிழகத்துக்குத் தண்ணீா் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு இதே நிலைமை இருந்தபோது, மேட்டூா் அணைக்கு ஆகஸ்ட் மாதத்தில் நீா் வரத்து அதிகரித்ததால், குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைந்தது. அதே நிலைமை இந்தாண்டும் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்