தஞ்சை சூன் 06: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலஉத்தமநல்லூர், பொன்னாவரை கிராமத்தில் ரூ. 10 இலட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பொன்னாவரை மேலத்தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறைந்த மின் அழுத்தம் உள்ளதாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வந்தனர். இது சம்மந்தமாக மின்வாரியத்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கிராம மக்கள் இதுகுறித்து மனுக்களும் அனுப்பி இருந்தனர். இதனை பரிசீலனை எடுத்துக்கொண்ட மின்வாரிய துறையினர் பொன்னாவரையில் 5. 5. லட்சம் மதிப்பில் 100 கிலோ வாட்டிலும், மேலஉத்தமநல்லூரில் 4. 95 லட்சம் செலவில் 100 கிலோ வாட்டில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். தொடர்ந்து இதன் தொடக்க விழா நடந்தது.

தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகௌரி தலைமை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, திமுக ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருவையாறு உதவி மின்பொறியாளர்கள் செல்வபாரத், சசிகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்