தஞ்சாவூர், செப்.19: தஞ்சை மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் தஞ்சாவூர் ஷெட் (shed ) இந்தியா நிறுவனம் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் துறையும் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் அறையின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமை வகித்தார். தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் அறையை திறந்து வைத்து பேசினார்.

அவர் ‍பின்வருமாறு தனது உரையில் தெரிவித்தார், குழந்தைகளைப் பொருத்தவரை தனிமைப்படுத்தி வளரக்கூடிய வளர்ச்சி என்பது சரியாக அமையாது. எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் முழுமையான, உண்மையான வளர்ச்சி ஆகும். எனவே இது போன்ற நிகழ்வுகள் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது அடித்தளமாக அமையும்.

பெரும்பாலும் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். அல்லது கவிதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்த இரண்டுமே இங்கு அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேய காவல் அறையில் உள்ளது, குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும்.

இதை ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கு காவல்துறை மிகவும் கடமைப் பட்டிருக்கிறது. நான் திருச்சி சரகத்தில் டி .ஐ .ஜி .யாக இருந்தபோது அந்த சரகத்தில் இருக்கக்கூடிய 19 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அறையை உருவாக்கினோம். அது தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதுபோல தஞ்சை சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில், எந்தெந்த காவல் நிலையங்களில் இடவசதி உள்ளதோ அங்கெல்லாம் குழந்தைகள் நல அறையை உருவாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பும், வளர்சியும் ஒரு சமுதாயத்திற்கும், ஒரு நாட்டிற்கும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை யில் குழந்தைகளும் இளைஞர்களும் தான் உள்ளனர். இவர்களை சரியான வழிகாட்டுதலோடு திறமைவாய்ந்த குழந்தைகளாக வளர்த்தால் தான் எதிர்கால இந்தியா நாம் நினைக்க கூடிய வல்லமை பொருந்தியதாக அமையும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பும் வளர்ச்சியும் மிக முக்கியமாக உள்ளது. ஆகையால் அவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் காவல் துறையின் பங்கு மிகப்பெரியது.

திருச்சி மத்திய மண்டலத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போக்சோ சட்டத்தில் உள்ளபடி, அனைத்து கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், அனைத்து கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பணியாற்றி சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஏதேனும், குற்றங்கள் நடந்திருந்தால் அதனை உடனடியாக விசாரித்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டு வருகிறது. போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று வெளியில் வந்து உள்ள நபர்கள் குறித்தும் அவ்வப்போது கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறியப்பட்டு அவர்களை மீட்டு காவல்துறை மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய மண்டலத்தின் மூலம் பொருத்தவரை இதுவரை பெற்றோர்களை இழந்து தவிக்கும் 865 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தானாகவே முன்வந்து ஒரு குழந்தைக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் அவர்களை பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர்.

இதன் மூலம் மாதம் ஒருமுறை அந்த குழந்தைகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்து வருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டுதலை மத்திய மண்டலத்தில் உருவாக்கியிருக்கிறோம். மாவட்ட அளவில் உள்ள சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில் ஏடிஎஸ்பி தலைமையிலான குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்கள் அதிகமாக இருக்கின்றன.

சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்கள் ஓரளவிற்கு தெரியும். ஆனால், கிராமபுறங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்கள் குறித்து தெரிவதற்கு வாய்ப்பில்லை.

ஆகையால் அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மூலம் சைபர் கிரைம் போலீசார் அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், எல்லா தாய் கிராமங்களிலும் சைபர் கிளப்ஸ் என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் மூலம் அந்த கிராமத்தில் படித்த இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலம் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்களை குழந்தைகளிடையே ஏற்படுத்தி வருகிறோம்.

அதே போல் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் மாதம் ஒருமுறை குடும்ப விழா என்ற பெயரில் பாதிக்கப்பட்ட தம்பதியினர்களை நேரில் வரவழைத்து, அவர்களுக்கு அறிவுரைகள் கூறி சுமுகமான முறையில் அவர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சர்வதேச நீதி குழுமத்தின் சார்பில் ப்ரீத்தி டேனியல் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார். தஞ்சாவூர் ஷெட் இந்தியா நிர்வாக இயக்குனர் பாத்திமா ராஜ் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat