தஞ்சை மே 04 பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில், 54 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வென்ற நிலையில், மாமனாருக்கு பிறகு தொகுதியை மருமகன் தக்க வைத்துவிட்டார் என திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியாக அறிவிக்கப்பட்ட 1967 -ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மறைந்த முதல்வர் கருணாநிதி நண்பரான எம்.கிருஷ்ணமூர்த்தி திமுக சாரர்பில் போட்டியிட்டு, 35,505 வாக்குகள் பெற்று, எம்எல்ஏவானார். பின்னர் 1971-ல் நடந்த தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் செல்லையாவிடம், திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி தோல்வியை சந்தித்தார்.


அதன்பிறகு, அதிமுக மூன்று முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும் வெற்றி பெற்றது. 1996-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சி வெற்றி பெற்றது.
2001 -ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமாகாவும், 2006-ம் ஆண்டு அதிமுகவும், 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், 2016-ம் ஆண்டு அதிமுகவும் வெற்றி பெற்றது.


இந்நிலையில், 54 ஆண்டு பிறகு பேராவூரணியில் தொகுதியில், திமுக சார்பில் என்.அசோக்குமார் போட்டியிட்டார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணாமூர்த்தியின் மருமகனான அசோக்குமார் 23,503 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். 54 ஆண்டுக்கு பிறகு மாமனார் பெற்ற வெற்றியடுத்து, அதே இடத்தில் மருமகனும் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

20 ஆண்டுக்கு பிறகு பட்டுக்கோட்டையில்… பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியி்ல் கடந்த 1996-ம் ஆண்டு திமுக சார்பில் பி.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 20 ஆண்டுக்கு பிறகு திமுக நேரடியாக களமிறங்கியது. இதில் மூன்று முறை வெற்றி பெற்ற த.மா.கா. எம்.எல்.ஏ என்.ஆர்.ரெங்கராஜனை 25,269 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக வேட்பாளருமான அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை

Open chat