தஞ்சாவூர் பிப்.20 —
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா, கல்லூரி விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார், தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.ராணி வரவேற்றார், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி மேனாள் முதல்வர் சிவகார்த்திகேயன் வாழ்த்திப் பேசினார்.
பட்டிமன்றப் பேச்சாளர் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “பழைய இலக்கியங்களை எவனொருவன் விரும்பி படிக்கிறானோ, அவனால் மட்டுமே நல்ல படைப்புகளை தரமுடியும், இலக்கியங்கள் ஒருவனை சிறந்த படைப்பாளியாக, கற்பனாவாதியாக உருவாக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன் பெண்ணிடம் பேசினாலே தப்பாய் பார்க்கக் கூடிய காலமாக இருந்தது. இன்றைக்கு பெண்ணோடு பேசவில்லை என்றால் தான் தப்பாக பார்க்கக் கூடிய காலமாக மாறி விட்டது.
என் பார்வையில், காலம் என்பது ஆரோக்கியமாக மாறி விட்டது என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
ஆயிரம் சொன்னாலும் நாகரீகத்தையும்,பண்பாட்டையும், ஒழுங்கையும் நேசிக்கக் கூடியவர்கள் நமது பிள்ளைகள் என்பதை மறந்து விடக்கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரீனா கடற்கரையில் 12 லட்சம் பேர், ஆண்கள், பெண்கள் என நெருங்கி நின்ற போதிலும், எந்த தவறும் நடந்து விடாமல் பண்பாடு காத்தவர்கள் நமது இளைஞர்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.
என்றைக்காவது என் இளைஞர்களுக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தால், அவன் ஒரு நாளும் தவறு செய்யமாட்டான். பொறுப்பைக் கொடுக்காத சமூகம் குற்றவாளியே தவிர, இளைஞன் ஒரு நாளும் குற்றவாளி இல்லை என்பதை உணர வேண்டும்.
தமிழர்கள் இலக்கியத்தை உள்வாங்க வேண்டும். வெளிப்பாட்டு முறையில் உலகத்தோடு போட்டி போட வேண்டும். மைக்கேல் ஹெச் ஹன்ட் என்ற அமெரிக்கர், தி ஹண்ட்ரட் (நூறு பேர்) என்ற பெயரில் எழுதி, மணவை முஸ்தபா மொழிபெயர்ப்பு செய்த நூலில், உலகத்தில் செல்வாக்கு செலுத்திய, மாற்றியமைத்த நூறு பேரை பட்டியல் இட்டார். இந்த நூலில் இரண்டாம் இடம் பெற்ற ஐசக் நியூட்டன் உள்ளிட்ட 36 பேர் அறிவியலாளர்கள். இதில் எத்தனை பேர் இந்தியர்கள். ஒருவர் கூட இதில் இந்தியர் எவரும் இல்லை என்பது சிந்திக்க வேண்டிய, கவலைக்குரிய விஷயம்.
ஏழையாக எவரும் பிறப்பது பாவமில்லை. தவறுமில்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறக்காதே. இதற்கு ஒரே வழி படிக்கிற கல்வியை மனசுத்தத்தோடும், நமக்கானது என்றும் படிக்க வேண்டும். ஏன் இந்தியாவில் விஞ்ஞானிகள் வரவில்லை ? இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று தெரியுமா? இந்திய மரபில் இருக்கின்ற ஆகப்பெரிய சிக்கல்… குடும்பம் தொடங்கி, சமூகம் தொடங்கி, சாதி தொடங்கி, கடவுள் தொடங்கி, அனைத்துமே, சிந்திக்காதே என்று சொல்வதுதான். இந்தியாவில் விஞ்ஞானிகள் உருவாமல் போனதற்கு காரணம் என்பதை உணர வேண்டும். எனவே, மாணவர்கள் நன்கு சிந்தித்து தங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் தன்மை இருந்தால் தான் உங்களால் எதனையும் வெற்றி கொள்ள முடியும்.
தமிழை விட ஒரு சிறந்த அறிவியல் மொழி இருக்க முடியாது. அல் என்றால் இரவு. அதனால் தான் இரவில் பூக்கும் மலருக்கு அல்லி என்றும், புல் வகையைச் சேர்ந்த மூங்கிலில் தயாராகும் இசைக் கருவிக்கு புல்லாங்குழல் எனவும் பெயர் வைத்தான். கரிகால் சோழன் கட்டிய கல்லணை அறிவியலின் உச்சம். எனவே, உலகின் சிறந்த அறிவியல் மொழி தமிழ் தான் என உறுதியாக சொல்லலாம்.
தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள கோயில் களின் கட்டிட அமைப்பு இன்று வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத கட்டிடக் கலையின் வியப்பு.
இப்படி இருந்த நாம் ஏன் வீழ்ந்தோமென்றால், நமக்குள் இருக்கும் சாதிப் பிளவு, சாதி தான் அறிவையையும், உழைப்பையும் பிரித்தது. உழைக்கிறவனை படிக்க விடாமல் ஒடுக்கியது சாதி தான்.
படிக்கின்ற காலத்தில் மாணவர்கள் தங்கள் கவனத்தை வேறு வழிகளில் திருப்பி விடாமல், வாழ்க்கையில் முன்னேற பயன்படுத்தி கொள்ள வேண்டும். பண்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். தமிழக இளைஞர்களின் ஆகப்பெரிய சக்தி வீணடிக்கப்படுவது மதுவால் தான். எனவே, படிக்கின்ற காலத்தில் உங்களை, நீங்களே கட்டமைத்துக் கொள்ளுங்கள்.
எவரெஸ்ட்டில் ஏறுவதற்குத் தான் நட்பு தேவையே தவிர, பள்ளத்தில் வீழுவதற்கல்ல” என்றார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கிலத்துறை தலைவர் ர.ராஜ்மோகன் நன்றி கூறினார். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.