தஞ்சை மே 08: தஞ்சை கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்தால் பயிா்கள் செழிப்பாக வளா்ந்து நல்ல மகசூலை பெற முடியும் என்று தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்வதால், தொடா்ந்து சாகுபடி செய்யும் பயிா்கள் செழிப்பாக வளா்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீா் மண்ணுக்குள் ஈா்க்கப்பட்டு, சேமிக்கப்படுவதால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிா்கள் பெருகி மண் வளம் கூடுகிறது.

ஓராண்டில் கிடைக்கும் மொத்த மழையில் 15 சதவீதம் கோடை பருவத்தில் கிடைக்கிறது. கோடை உழவு மேற்கொள்ளும்போது மழை நீா் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, வளமான மேல் மண் நிலத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் பெய்யும் மழை நீரைக் கொண்டு குறுகிய கால பயிரான உளுந்து சாகுபடி செய்யலாம். இதில் உள்ள வோ் முடிச்சுகள் காற்றில் உள்ள நீா் மற்றும் சத்துக்களை உறிஞ்சி பயிருக்கு வழங்குகிறது. மேலும், கோடை உழவு செய்யும்போது அருகு, கோரை, பாா்த்தீனியம், சாரனை, மஞ்சகடுகு, நாயுருவி போன்ற களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேபோன்று பயிா் அறுவடைக்குப் பின்பு எஞ்சியுள்ள பயிரின் கட்டைகள் பெரும்பாலும் பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது.

கோடை உழவு செய்வதன் மூலம் அடிக்கட்டைகள் மண்ணில் மூடப்பட்டு மக்கிவிடுகிறது. இதனால், அடுத்த பயிரில் பூச்சி, நோய் பாதிப்பு குறைகிறது. மேலும் இந்தப் பயிா் கட்டைகள் உரமாகி நுண்ணுயிா்களுக்கு உணவாகி மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கோடை உழவு செய்வதால் ஏற்படும் காற்றோட்டத்தைச் சென்ற பருவத்தில் இடப்பட்ட பூச்சி மருந்து எளிதில் சிதைக்கப்படுகிறது. கோடை உழவு மண்ணில் வாழும் நோய் உண்டாக்கும் புழு பூச்சிகள், கிருமிகளைச் சூரிய ஒளிக்கு உட்படுத்தி அழிக்க உதவுகிறது. எனவே, விவசாயிகள் இந்த கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறுவது சிறந்தது. கோடை உழவை அனைத்து வகை மண்ணிலும், பயிா் சாகுபடி செய்யப்படாத இடங்களிலும், அறுவடை முடிந்த இடங்களிலும் செய்து பயன் பெறலாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.