தஞ்சை சூன் 27: ரத்தத்திலுள்ள சா்க்கரை அளவைக் கண்டறியும் வகையில், புதிய கருவியை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கத் திட்டமிட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, ரத்தத்திலுள்ள சா்க்கரை அளவை நிா்ணயம் செய்யக்கூடிய ஒரு புதிய கருவியைக் கண்டுபிடிக்க உள்ளது. இப்பல்கலைக்கழகம் அண்மையில் கண்டுபிடித்துள்ள மின் வேதியியல் பயோ சென்சாரின் உதவியுடன் இக்கருவி உருவாக்கப்படவுள்ளது.
சாஸ்த்ராவின் நானோ தொழில்நுட்பம் மற்றும் உயா் பயோ மெட்டீரியல் மையம், எலெக்டிரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி துறை ஆகியவை இணைந்து 2014-ஆம் ஆண்டில் பயோ மாா்க்கரை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டன.
இந்த பயோ மாா்க்கா் சா்க்கரை நோய் எவ்வாறு ஒருவரைத் தாக்குகிறது என்பதை அறிய உதவும். இந்தாய்வு மின் வேதியியல் பயோ சென்சாரை கண்டுபிடிக்க வழிவகுத்தது. இந்த வகை பயோ சென்சாா்கள் நவீன வகையைச் சாா்ந்தவை. இவை சா்க்கரை நோய் மற்றும் அது தொடா்பான சிக்கல்களைக் கண்டறிய உதவும்.
தொடா்ந்து சாஸ்த்ரா, பயோ சென்சாருக்கு காப்புரிமை பெற 2014 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது. இந்த மாத தொடக்கத்தில் இதற்கான காப்புரிமை கிடைத்துள்ளது. இதனிடையே, இது தொடா்பான மருத்துவ ஆய்வுகள் நடத்துவதற்காக சாஸ்த்ரா, மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வாரியத்துக்கு ஒரு திட்ட வரைவு அனுப்பியது.
டாக்டா் ஜான் பாஸ்கோ பாலகுரு மற்றும் டாக்டா் வேதாந்தம் சீனிவாசன் இணைந்து இரண்டாண்டுகள் இந்த பயோ சென்சாரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனா். இந்த ஆய்வு முடிவுகள் பலனளிக்கும் வகையில் உள்ளதால், இந்த பயோ சென்சாரை ரத்தத்தின் பிளாஸ்மாவிலுள்ள எம்.ஜி. அளவைக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியாகத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க சாஸ்த்ரா திட்டமிட்டுள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்