தஞ்சை சூலை 04: கொரோனா முன்களப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தாண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்று மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் இயங்கி வரும் மதர் தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது. மதர் தெரசா அமுதசுரபி அன்னதான திட்டம் என்ற பெயரில் தினந்தோறும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அன்னதானம் வழங்கி வருகிறது.
கொரனோ தொற்றினால் வருவாய் இழந்த 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதேபோல் மதர் தெரசா பவுண்டேசன் கல்வி உதவி திட்டத்தின் கீழ் தாய் தந்தை இல்லாத, உடல் ஊனமுற்ற , ஆதரவற்ற , பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் கொரனோ தொற்று காலத்தில் இரவு பகலாக உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள், மயானப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களின் குழந்தைகளுக்குக் இந்தாண்டு முன்னுரிமை அளித்துக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்குத் தகுதியுள்ள மாணவர்கள் www. motherteresafoundation. org என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம் எனவும் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.
செய்தி நாகராஜன் நிருபர்
http://www.thanjai.today