தஞ்சை மே 08: கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடா்புடைய இரு நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருள்கள், பைகளின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக நகா் நல அலுவலா் பிரகாசுக்கு புகாா்கள் சென்றன. இதன் அடிப்படையில், ஆழ்வான் கோயில் தெருவில் இயங்கி வந்த பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் திடீா் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அங்கு 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்நிறுவனத்திலிருந்து 2 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் மூட்டைகளில் இருந்த முகவரியைக் கொண்டு, பெரிய கடை வீதியில் உள்ள கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையும் நகராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்து கடையைப் பூட்டி சீல் வைத்தனா். அக்கடைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.