தஞ்சை ஏப்ரல் 16 தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூட வேண்டும் என தொல்லியல்துறை உத்தரவிட்டது.
அதன்படி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது. முன்புறம் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது.

அங்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று வழக்கம்போல் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஏற்கனவே கொரோனா பரவலால் வருகிற 23&ந் தேதி நடைபெறவிருந்த சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் சில மாதங்கள் கொரோனா பரவலால் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.

செய்தி க.சசிகுமார், நிருபர்
தஞ்சை.

Open chat