தஞ்சாவூர்: கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் 30-ம் தேதிக்குள் 5 கோடியை எட்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின்ர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாரந்தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை 500-க்கும் அதிகமான கிராமங்களில் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் 11.04 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் பேருக்கு மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நூறு சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மக்களவை உறுப்பினர் பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.