தஞ்சை பிப். 16 :

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை (எண்:79) பெண்களுக்கும், பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும், வணிகர்களுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால், கடையை அப்புறப்படுத்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்,  காலை பழைய பேருந்து நிலையம் அருகில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார், மாவட்டப் பொருளாளர் இ.வசந்தி, மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, கிளைச் செயலாளர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் என்.வசந்தா, கே. மலர்கொடி, எம்.அறிவு ராணி, ஆர்.வின்சிலா ராணி, நிர்வாகிகள் எஸ். சாந்தா, டி.வசந்தி, எஸ்.வனரோஜா, பார்வதி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக் குழு உறுப்பினர்கள் சி.ராஜன், கரிகாலன் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தஞ்சாவூர் வட்டாட்சியர், டாஸ்மாக் உதவி மேலாளர் ஆகியோர் திங்கட்கிழமை அன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து பேசி, முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Open chat